சிரியாவின் கடைசி கோட்டையான இத்லிப் மாகாணத்தில் ''ரஷ்யா'' வான் தாக்குதல் ஆரம்பம்!!! - தமிழ் துளி

Breaking

Tuesday, 4 September 2018

சிரியாவின் கடைசி கோட்டையான இத்லிப் மாகாணத்தில் ''ரஷ்யா'' வான் தாக்குதல் ஆரம்பம்!!!

சிரியாவின் கிளர்ச்சியாளர் கட்டுபாட்டில் இருக்கும் கடைசி கோட்டையான இத்லிப் மாகாணத்தில் ரஷ்யா பல வாரங்களின் பின் நேற்று வான் தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிரிய அரச படை இத்லிப் மீது படை  நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க தயாராகி வரும் நிலையிலேயே இந்த வான் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் இங்கு கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதிகளின் விளிம்புகளில் நிலைகொண்டிருக்கும் துருக்கி இராணுவம் இந்த படை நடவடிக்கை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி இத்லிப் மீதான வான் தாக்குதல்களை நிறுத்தியது. எனினும் சிரிய அரச படை தொடர்ந்தும் அங்கு வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கிளர்ச்சியாளர்களின் வடமேற்கு நிலத்தின் மேற்கு முனையில் இருக்கும் கிராமப்பகுதியான ஜிஸ்ர் அல் ஷுகுர் மீதே ரஷ்யா வான் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக கிளர்ச்சியாளர் தரப்பு குறிப்பிடுகிறது.
வரும் செப்டெம்பர் 7 ஆம் திகதி ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் தலைவர்கள் ஈரானில் சந்திக்கவுள்ளனர். இதன்போது இத்லிப் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

adsense